ஞாயிறு, 16 அக்டோபர், 2016

அமர்நாத்- கோயில்!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்,  ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்தில்,   3,888 மீட்டர் உயரத்தில்,  பனிபடர்ந்த இமயமலையின் உச்சியில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. 

இந்தத் தலத்தின் பழங்காலப் பெயர் 'அமரேஸ்வரா!'  இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் இந்து புராண காலத்தில் இருந்து மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.

இந்தியா முழுவதிலிருந்தும் பல நூற்றாண்டுகளாக யாத்திரீகர்களை ஈர்த்து வந்துள்ளதும் பல வரலாற்று ஏடுகளில் பதியப்பட்டுள்ளன.

இந்த லிங்கமானது சந்திரனின் வளர், மற்றும் தேய் காலங்களுக்கு ஏற்ப உரு மாறுவதாக குறிப்பிடப்படுகிறது.

ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் புனிதப்பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.

'பகல்காம்' மற்றும் 'பல்தால்' ஆகிய இடங்களில் இருந்து இந்த யாத்திரை தொடங்கப்படுகிறது.

பல லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் குவிவதால் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும்  மலையடிவாரத்தில் உள்ள ஆறு முகாம்களில் செய்யப்படுகின்றது.

ஆண்டுதோறும் பல லட்சம் பேர் மழையையும் குளிரையும் பொருட்படுத்தாமல் பனிலிங்கத்தை தரிசித்துவிடுவதற்காகவே காத்திருந்து யாத்திரை செல்கின்றனர்.

'பாகல் காவ்'(பகல்காம்)  வரைதான்  வண்டிகளின் வசதி.

குறைந்த பக்தர்கள் இங்கிருந்தே நடை பயணம் மேற்கொள்வர்.

இங்கு நாம் இறங்கியவுடன்  டோலி தூக்குபவர்கள்(பல்லக்கு), கோவேறு கழுதை உரிமையாளர்கள் நம்மை சூழ்ந்து கொள்வார்கள்.

ஆம்! இவர்கள் தாம் பயணத்தில் நமது உறவுகள்!

உங்களால் நடக்க முடியுமென்றால்...

இவர்களின்
அன்பான விண்ணப்பங்களை தவிர்த்து விடலாம்.

குழுவின‌ரின் முன்பு சாமியார்க‌ள் ச‌ங்கு ஊத‌ ந‌ம‌து ப‌ய‌ண‌ம் புற‌ப்ப‌டுகிற‌து.  "ஹ‌ர் ஹ‌ர் ம‌ஹா தேவ்", "ஜ‌ய் போலே நாத்",  "ப‌ம் ப‌ம் போலெ",  "போலேநாத்கி ஜெய்" என‌ ப‌ல‌ கோஷங்க‌ளுட‌ன் ப‌ய‌ண‌ம் புற‌ப்ப‌டுகிற‌து.

சிறிது துரம், ஆங்காங்கே அமர்ந்திருக்கும் வியாபாரிகள்.... 

தூரம் செல்ல செல்ல,  காணாமல் போய்விடுவார்கள்!

இனி,  நமக்கு கண்ணில் படுவது...

பனி மூடிய சிகர‌மும்,  பசுமை விரித்த பள்ளத்தாக்குகளும், தூரத்தில் மேயும் ஆட்டு கூட்டங்களும்,  நம்முடன் வரும் பக்தர்களின் நமச்சிவாய நாமங்களும், வழியில் பாதுபாப்பு படையினரின் கூடாரங்களும் தான்!

அமர்நாத் பனிலிங்கம் சில ஆண்டுகளாகவே விவாதத்திற்குட்பட்ட பொருளாகிவிட்டது. 1999 க்கு பிறகு பல பக்தர்களுக்கு சரளைக்கல் மேடாக காட்சியளித்தார்.

லிங்கம் விரைவில் கரைவதற்கும் சில வருடங்கள் தோன்றாமல் போவதற்கும் சில காரணங்கள் பரவியது.

அதிக பக்தர் வருகை, வாசனை பக்தி பொருள்கள் அதிகம் வைத்தல், புவியின் வெப்பம் அதிகமாகுதல், எலிகாப்டர் அடிக்கடி அங்கு வர அதன் அதிர்வில் லிங்கம் உருவாகாமல் போதல் என பல யூகங்கள்.

'தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களுக்கு இலக்காகலாம்'  என்ற காரணத்தினால் இக்கோயில் இந்திய இராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.

எனவே இந்திய அரசின் முன் அனுமதியைப் பெற்றே இங்கு செல்ல வேண்டும்.

ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரவாதிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

குகைக்கு வ‌ரும் 100 ப‌க்த‌ர்க‌ளில் 30 பேர் இஸ்லாமிய‌ர்க‌ள்!

இவ‌ர்க‌ளும் லிங்க‌ நாத‌ரை த‌ரிச‌ன‌ம் செய்கின்ற‌ன‌ர்.

ஆம்! இவ‌ர்க‌ள் லிங்க‌ நாத‌னுக்கு வைத்த‌ பெய‌ர் 'ப‌ர‌ப்பானி பாபா(ப‌னிக‌ட்டி பாபா)'!

மேலும் ப‌க்த‌ர்க‌ளுக்கு ம‌லை ஏற்ற‌ துவ‌க்க‌த்தில் இருந்து....

மீண்டும் இற‌ங்கும் வ‌ரை,  ந‌ம‌க்கு ந‌ல் உற‌வாக‌ இருந்து உத‌வுவ‌தும் 'இஸ்லாமிய‌ர்க‌ள்' தான்!

ம‌த‌  நல்லிணக்கத்திற்கான ஒரு பாலமாக  அம‌ர்நாத் யாத்திரை உள்ளது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக